தனது அழகான சிரிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சினேகா, தமிழ் சினிமாவில் “புன்னகை அரசி” என மக்களால் கொண்டாடப்படுகிறார். பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், தனது கேரியர் உச்சத்தில் இருந்தபோதே சக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு நடிகை சினேகா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதோடு சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். மேலும், சினிமாவைத் தாண்டி தனது சொந்தமாக புடவை கடை தொடங்கி அதிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விருது விழா மேடையில் பேசிய சினேகா ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். சினிமாவுக்கு வந்த புதிதிலேயே மூன்றே ஆண்டுகளில் தான் ஒரு பெரிய விபத்தில் சிக்கியதாகவும், அந்த விபத்தில் கை, கால், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் கடுமையாக காயமடைந்ததாகவும் அவர் கூறினார். அந்த நேரத்தில் தன்னால் மீண்டும் நடக்கவே எட்டு மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது இயக்குனர் கரு. பழனியப்பன் தனது ‘கனவு’ படத்தின் கதையை கூற வந்ததாகவும், “நான் நடக்கவே முடியாத நிலையில் இருக்கிறேன், எப்படி இந்த கதையை சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டபோது, “இன்னும் ஒரு மாதத்தில் நீங்க நிச்சயம் நடந்து விடுவீங்க” என்று அவர் தைரியம் அளித்ததாகவும் கூறினார்.
அந்த நம்பிக்கையும் தைரியமும் தான் தன்னை மீண்டும் எழுந்து நிற்க வைத்தது என நடிகை சினேகா உருக்கமாக தெரிவித்துள்ளார்.



