நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக உள்ளது.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் தாயார் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதாக கூறப்படும் ஒரு பழைய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், ராஷ்மிகா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டியின் நிச்சயதார்த்தத்தின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறித்து அவரது தாயார் பேசுவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அந்த ஆடியோவை பகிர்ந்து வரும் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் அதை நீக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கடந்த 8 ஆண்டுகளாக சில ஊடகங்களும் தனிநபர்களும் தன்னுக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களை தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது பேச்சுகளை சூழலுக்கு புறம்பாக மாற்றி தவறாக பரப்புவது, தாம் சொல்லாத விஷயங்களை கதைகளாக உருவாக்குவது போன்ற சம்பவங்களை பலமுறை பார்த்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். வெறும் வியூஸ்களுக்கும் ஈடுபாட்டிற்காகவும் வெறுப்புணர்வு பரப்பப்படுவதாகவும், பொது வாழ்க்கையில் வரும் விமர்சனங்களை இதுவரை பொறுத்துக் கொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த சில செயல்கள் எல்லையை மீறியதாக இருப்பதால், இதை இனி புறக்கணிக்க முடியாது என்றும் ராஷ்மிகா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



