நடிகை த்ரிஷாவைச் சுற்றியுள்ள குந்தவை சர்ச்சை விவகாரம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து நடிகர் பார்த்திபன் வெளியிட்ட காணொளியில், 40 வயதாகும் த்ரிஷா விஜயுடன் திருமண நிகழ்வுக்கு செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். முன்னதாக, “குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது” என்று மேடை நிகழ்ச்சியில் பார்த்திபன் கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை த்ரிஷா மறைமுகமாக விமர்சன பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் பார்த்திபன் நீண்ட காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், நண்பர் விஜய் மீது இருக்கும் அக்கறையால்தான் அந்த வார்த்தைகளை கூறியதாகவும், இந்த அளவுக்கு சர்ச்சை ஏற்படும் என்று தெரிந்திருந்தால் அந்த திருமண நிகழ்வுக்கு த்ரிஷா வராமல் இருந்திருக்கலாம் என்ற ஆதங்கத்தில் தான் அந்த கருத்தை தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், கரூர் விவகாரத்திலும் கூட விஜய் மீது இவ்வளவு விமர்சனங்கள் எழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பலர் த்ரிஷாவையே குற்றம் சொல்வதையும், விஜய் மீது வரும் விமர்சனங்களை தவிர்ப்பதையும் சுட்டிக்காட்டி இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் மருத்துவ நிபுணர் டாக்டர் ஐசக் அப்பாஸ் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மருத்துவர் பாணியில் மறைமுகமாக விஜயை கலாய்த்து அவர் வெளியிட்ட இந்த காணொளி சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் மற்றும் கருத்துகளை குவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



