‘இதயம் முரளி’ திரை விமர்சனம்:
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காதலை மையமாகக் கொண்ட இந்த ரொமான்டிக் எண்டர்டெய்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? விரிவாக பார்க்கலாம்.

கதைக்களம்
படத்தின் தொடக்கத்திலேயே அதர்வாவின் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன. திருமணத்திற்கான அனைத்து பொறுப்புகளையும் அவரது தாய் மாமனாக வரும் நட்டி நட்ராஜ் கவனித்து வருகிறார். ஆனால், திருமணத்திற்கு முந்தைய நாள் மாப்பிள்ளையான அதர்வா நண்பர்களுடன் வெளிநாட்டில் இருப்பதால் அவசரமாக சென்னை திரும்புகிறார்.
விமானப் பயணத்தின் போது பகத் பாசிலை சந்திக்கும் அதர்வா, தனது வாழ்க்கையில் நடந்த காதல் சம்பவங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறார்.

பள்ளிப் பருவத்தில் ப்ரீத்தி முகுந்தனை பார்த்தவுடன் காதலில் விழும் அதர்வா, அவர் செல்லும் டியூஷன் சென்டர் முதல் டென்னிஸ் மைதானம் வரை பின்தொடர்கிறார். ஒருநாள் தனது பிறந்தநாள் விழாவிற்கு ப்ரீத்தி அழைக்க, அங்கு சென்ற அதர்வாவுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. ப்ரீத்தி ஒருவரல்ல, இரட்டையர்கள் என்பது தெரியவர, இதுவரை யாரை காதலித்தோம் என்ற குழப்பத்தில் தனது காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
காலம் நகர, சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் கயாடு லோஹரை சந்திக்கும் அதர்வா மீண்டும் காதலில் விழுகிறார். அவரிடமும் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் திணறும் அவர், இறுதியில் காதலை சொல்லி வெற்றி பெற்றாரா? அல்லது குடும்பத்தினர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் எப்படி இருக்கிறது?
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் தேர்வு செய்துள்ள கதைக்களம் புதுமையாகவும், சில சர்ப்ரைஸ் தருணங்களுடனும் அமைந்துள்ளது. ஆனால் அந்த கதைக்கு ஏற்ற சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாதது படத்தின் மிகப்பெரிய பலவீனமாக மாறியுள்ளது.

தொடக்கத்தில் நன்றாக நகரும் படம், அதன்பிறகு மெதுவாக வேகம் இழந்து கிளைமாக்ஸ் வரை அதே தொய்வை தொடர்கிறது. குறிப்பாக, கதாபாத்திரங்களின் உணர்வுகளுடன் ரசிகர்களால் எளிதில் ஒன்றுபட முடியாதது படத்தின் தாக்கத்தை குறைக்கிறது.
அதர்வா தனது காதலை சொல்லும் தருணங்களில் ஏற்பட வேண்டிய பதட்டமும், எதிர்பார்ப்பும் திரையில் பெரிதாக உணரப்படவில்லை. சில இடங்களில் நீளமான காட்சிகளும், எடிட்டிங்கும் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
இருப்பினும், பகத் பாசிலின் கதாபாத்திரம் கிளைமாக்ஸில் படத்திற்கு சிறிய அளவில் வலு சேர்க்கிறது.
நடிப்பு எப்படி?
அதர்வா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோரும் இயல்பான நடிப்பால் கவர்கிறார்கள்.
சுதாகர் தனது நகைச்சுவை காட்சிகளில் அதிக கவனம் ஈர்க்கிறார். அதேபோல் ரக்ஷன், தமன், நிஹாரிகா, டிராவிட், ஏஞ்சலின், ஜோனிடா காந்தி உள்ளிட்டோரின் பங்களிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இடையிடையே வரும் சில பிரபலங்களின் சர்ப்ரைஸ் தோற்றங்களும் ரசிகர்களை மகிழ்விக்கின்றன.

டெக்னிக்கல் அம்சங்கள்
படத்தின் மிகப்பெரிய பலம் தமனின் இசை தான். பாடல்களும், பின்னணி இசையும் பல காட்சிகளுக்கு உயிர் கொடுக்கின்றன. குறிப்பாக காதல் காட்சிகளில் பின்னணி இசை ரசிகர்களை ஈர்க்கிறது.
ஒளிப்பதிவு மிகவும் கலர்புல்லாக அமைந்துள்ளது. வெளிநாட்டு காட்சிகளும், 90-களின் காலகட்டத்தை மீண்டும் திரையில் கொண்டு வந்த விதமும் ரசிக்க வைக்கிறது. சில தொழில்நுட்ப அம்சங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற உணர்வும் ஏற்படுகிறது.
பிளஸ் பாயிண்ட்ஸ்
- அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் ஆகியோரின் நடிப்பு
- தமனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை
- வித்தியாசமான கதைக்களம்
- அழகான ஒளிப்பதிவு
- 90-களின் காலகட்டத்தை காட்சிப்படுத்திய விதம்
- நகைச்சுவை காட்சிகள்
மைனஸ் பாயிண்ட்ஸ்
- சுவாரஸ்யம் குறைந்த திரைக்கதை
- பல இடங்களில் தொய்வான காட்சிகள்
- கதாபாத்திரங்களுடன் உணர்வுபூர்வமான இணைப்பு ஏற்படாதது
- மெதுவான திரைக்கதை நகர்வு
இறுதி Verdict
காதல் கதைக்கு வித்தியாசமான கருவை தேர்வு செய்திருந்தாலும், அதனை முழுமையாக சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றுவதில் இயக்குநர் தடுமாறியுள்ளார். நடிகர்களின் நடிப்பு, தமனின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்தை ஓரளவு காப்பாற்றினாலும், திரைக்கதையின் பலவீனம் காரணமாக ‘இதயம் முரளி’ ரசிகர்களின் இதயத்தில் ஆழமாக பதியத் தவறுகிறது.
