உலகின் முக்கியமான எரிபொருள் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்மோஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் சுமார் 20 சதவீத எரிபொருள் விநியோகம் இந்த நீரிணை வழியாக நடைபெறுகிறது. இதனால் எரிபொருள் கப்பல்கள் சீராக செல்ல முடியாத நிலை உருவாகி, இந்தியா உட்பட பல ஆசிய நாடுகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
இந்த நிலைமை காரணமாக பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் பல இடங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் குவிந்து, வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதோடு கேன்களிலும் லிட்டர் கணக்கில் வாங்கி செல்கின்றனர்.
அதேபோல், வணிக பயன்பாட்டிற்கான LPG சிலிண்டர் விநியோகத்திலும் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சில உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ள HCL நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. மேலும் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மற்றும் பாரத் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து, விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் போதுமான அளவில் பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது என்றும், மக்கள் தேவையின்றி பெட்ரோல் நிலையங்களில் அதிகளவில் குவிய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மக்களவையில் விளக்கம் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, வணிக பயன்பாட்டிற்கான LPG சிலிண்டர் விநியோகம் 10 நாட்களுக்குள் சீராகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வீட்டு உபயோக LPG விநியோகத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை என்றும், போர் நீண்ட காலம் நீடித்தாலும் இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக ஏற்பாடுகள் போதுமான அளவில் உள்ளன என்றும் தெரிவித்தார்.
நெருக்கடி ஏற்படும் முன்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 45% ஹார்மோஸ் நீரிணை வழியாக வந்தது. தற்போது மாற்று வழிகளில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு 70% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அனைத்து குடும்பங்களுக்கும் LPG கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 5 நாட்களில் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்நாட்டு உற்பத்தி 28% அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் LPG சிலிண்டர் பதிவு செய்வதற்கான இடைவெளி 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் ஒரு மாத காலத்திற்கு biomass, RDF pellets, மண்ணெண்ணெய், நிலக்கரி போன்ற மாற்று எரிபொருள்களை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகம் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



